
சமூக அநீதிகளை அழிக்க, ஒரு கற்பனைக் கதாபாத்திரம் உண்மையாக அவதரித்தால்?இதுதான் வேலாயுதத்தின் ஒன் லைன்.
திருப்பாச்சி, கந்தசாமியை கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள். விஜய் ஹீரோ என்பதால், பாகிஸ்தான் தீவிரவாதிகள் டெல்லி, மும்பை தாண்டி நேராக சென்னைக்கே வருகிறார்கள். தமிழகத்தின் பொற்கால ஆட்சியை சீர்குலைக்க பல இடங்களில் வெடிகுண்டு வைக்க திட்டமிடுகிறார்கள். இவற்றையெல்லாம் முறியடிக்க பத்திரிகையாளரான ஜெனிலியா வேலாயுதம் எனும் ஒரு கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்குகிறார். அதே நேரத்தில் தங்கை திருமண விஷயமாக சென்னை வருகிறார் விஜய். எதேச்சையாக இரண்டு டைம்லைன்’களும் சங்கமிக்க விஜய் வேலாயுதமாக மாறி சமூக அநீதிகளை எப்படி அழிக்கிறார் என்பதுதான் படம்.
சரியான கதாபாத்திர தேர்வுகள். சரண்யா மோகன், ஹன்ஷிகா, சந்தானம் என்று அனைவரும் முதற்பாதியை அலுப்புத்தட்டாமல் நகர்த்தியிருக்கிறார்கள். தங்கைக்காக விஜய் செய்யும் சேட்டைகள், பணத்தைத் திருட சந்தானத்தின் முயற்சிகள் என்று முதற்பாதி முழுவதும் சிரிப்பலைகள். வேலாயுதம், போகிறபோக்கில் தீவிரவாதிகளின் சில திட்டங்களை முறியடித்துச் செல்கிறார். மக்களுக்கு வேலாயுதம் யார்? என்ற எதிர்பார்ப்பு மேலோங்குகிறது. இடைவேளை.
ஆறாம் அறிவை ஆப் செய்து விட்டு உட்கார்ந்தால் இரண்டாம் பாதி சூப்பர், ஆஹா ஓஹோ. வில்லன்களைப் பின்னுகிறார் வேலாயுதம். கள்ளநோட்டுகளை அழிக்கிறார், அணு உலைக்குள் பாயவிருக்கும் ரயிலை சடன் பிரேக் போட்டு நிறுத்துகிறார்,சிட் பண்ட் மோசடிப் பணத்தை மீட்டுக் கொடுக்கிறார், என இரண்டாம் பாதி முழுக்க வேலாயுதத்தின் அட்டூழியங்கள், சாரி அற்புதங்கள். இந்தப் பகையில் தங்கை இறந்து விட,அதற்குக் காரணமான வில்லன்களை வேலாயுதம் எப்படி பழி தீர்க்கிறார் என்பது மீதிக்கதை.
பாடல்கள், காமெடி,சென்டிமென்ட் என்று அனைத்தும் சரியாகப் பொருந்தி வருவது படத்திற்கு பெரிய பலம். கத்திப் பேசுவது,சவால் விடுவது, ஜம்ப் பண்ணுவது என்று வழக்கமான விஷயங்கள் இல்லாமல் விஜய் யதார்த்தம், ஜோடி ஹன்ஷிகா செம பதார்த்தம். ஜெனிலியா வந்த வேலையை சரியாக செய்திருக்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் சந்தானம் கலக்கியிருக்கிறார்.
இரண்டாம் பாதியில், லாஜிக் மீறல்கள் தான் படத்தின் ஒரே மைனஸ். சூப்பர் ஹீரோ கதை என்பதால் கொஞ்சம் சகித்துத் தான் ஆக வேண்டும். “ஆண்டவன் இருக்கானோ இல்லையோ, வேலாயுதம் இருக்கான்” போன்ற மக்கள் வசனங்கள், ஸ்ஸ்ஸப்பா முடியல. முதல் முறையாக சிக்ஸ் பேக் காட்டி சண்டை போட்டிருக்கிறார் விஜய், நோ கமெண்ட்ஸ்.
ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கோபம்தான் வேலாயுதம் என்று கருத்து சொல்லியிருக்கிறார்கள். நீங்களும் வேலாயுதம் நானும் வேலாயுதம் என்பதால், ஒருமுறை நண்பர்களோடு/குடும்பத்தோடு படத்தை பார்த்து விடுவது நல்லது. தனியாக சிக்கினால் கம்பெனி பொறுப்பல்ல.
நன்றி - குரு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக