வியாழன், 28 ஜூலை, 2011

வேதன அதிகரிப்பும் வேதனை அதிகரிப்பும்

இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் (FUTA) தொழிற்சங்க நடவடிக்கை  ஓரளவு எதிர்பாராத விதமாக, கடந்த வாரம் தற்காலிக முடக்கத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. என்றாலும், சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்கள் தலைவர் டாக்டர் நிர்மல் ரஞ்சித் தேவசிரி அவர்கள், தொழிற்சங்க பிரச்சினைகளை அரசாங்கம் கையாளும் வழி பற்றி தாம் நன்கு அறிந்திருக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார். இரண்டரை மாதகாலமாக மிகத் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த தொழிற்சங்க நடவடிக்கை, சடுதியாக நிறைவுற்றமையும், FUTA தலைவரின் இக்கூற்றும் உண்மையில் கல்வியாளர்களின் நியாயமான போராட்டம் வெற்றி அடைந்துவிட்டதா..? அல்லது இக்கட்டு நிலையை(Stalemate) அடைந்து விட்டதா என இரு வேறான ஐயங்களை எழுப்பியுள்ளது.


 இலங்கையின் உயர்கல்வித்துறையை எடுத்து நோக்கும்போது அது முக்கியமாக ஆராய்ச்சிபோதனை, சமூக சேவை என்ற மையக் குறிக்கோள்களைக் கொண்டுள்ளது.  சமூகத்திற்கு ’வேலைத்திறனுடைய’, ‘கேள்வியுள்ள’ பட்டதாரிகளை அனுப்புவதில் பல்கலைக்கழகங்களும், கல்வியாளர்களும் பங்காற்றி வருகின்றனர். கல்வியாளர்களின் இந்த தொழிற்சங்க நடவடிக்கையானது வெறுமனே பல்கலைக் கழக மாணவர்களுக்கான பாதிப்பு மட்டுமில்லை என்பதை பலர் உணராதவர்களாக காணப்படுவது மிகுந்த வேதனையளிக்கின்றது. இந்நடவடிக்கையினால், ஏனைய பணிகளுக்கான செயற்திறன் மிக்க பணியாளர்கள் வருவதும் தாமதப் படுத்தப்படும் என்பதை நாம் அனைவரும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

ஏனைய தொழிற்சங்க நடவடிக்கைகளைப் போன்று இது வெறுமனே வேதன அதிகரிப்புக்கான போராட்டம் அல்ல என்பதைப் பலர் விளங்கிக் கொள்ள மறுக்கின்றனர். எனவேதான், இத் தொழிற்சங்க நடவடிக்கை முற்றுப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது முதல் கல்வி சாராத ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையொன்று நடைபெறப் போவதாக கதையொன்று பரவி வருகின்றது. கல்வியாளர்களுள் முதுநிலைப் பேராசிரியர்களின் எண்ணிக்கை இலங்கையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்படுகின்றது. முதுநிலை பேராசிரியர்களின் இந்த எண்ணிக்கை வீழ்ச்சியானது அவர்களின் பிறநாட்டு வெளியேற்றத்தினால் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறான இவர்களின் இந்த வெளியேற்றத்திற்கு, கல்வியாளர்களுக்கு மிகக் குறைந்த வேதனம் வழங்கும் நாடாக, அதுவும் எத்தியோப்பியா போன்ற பின் தங்கிய நாடொன்றிலும் பார்க்க குறைந்த வேதனம் வழங்கும் நாடாக இலங்கை விளங்குகின்றதும் ஒரு காரணமாகலாம்.
இப்படி இத்தொழிற்சங்கப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் விதமாக பல கட்டுரைகள் கடந்த சில வாரங்களாக வெளிவந்திருந்தன. எனினும் இன்னமும் பல ஊடகங்கள் இத்தொழிற்சங்கப் போராட்டத்தின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதில் பின் நிற்பதாகவே தோன்றுகிறது.
”சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட்டது”  என்ற செய்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தை இவர்கள் ஏன் கல்வியாளர்களின் பிரச்சினைகளுக்கு கொடுக்க மறுத்துவிட்டனர் என்பது புரியவில்லை. இதையெல்லாம் விடுவோம்.. இப்போது ’எல்லாம் சரிவந்து விட்டது’ என்று பலரும் நினைப்பது போல் எல்லா நிபந்தனைகளுக்கும் அரசாங்கம் தலையசைத்து விட்டதா..? இந்தக் கேள்விக்கு யாரிடமும் இன்று சரியான பதில் இல்லை. இந்த இறுதித் தீர்மானங்கள் பற்றி எந்தவொரு சகோதர சங்ககங்களுக்கும் அறிவிக்கப்படவில்லையா..? அல்லது தெளிவு படுத்தியது போதாமல் உள்ளதா..? இப்படி பல கேள்விகளுக்கு விடை இல்லாமலையே இத்தொழிற்சங்கப் போராட்டம் தற்காலிக முடங்கு நிலையை அடைந்துள்ளது.

மேலும் கல்வியாளர்கள் பட்டியலில் உள்ள தற்காலிக உறுப்பினர்கள் பற்றி எந்த ஒரு வாக்கியத்தையும் அரசாங்கத்தின் அறிவித்தல் எனக் காட்டப் பட்ட அறிக்கையில் காணப்படாததையிட்டு அலட்டிக் கொள்ள யாருமே விரும்பவில்லை போலும்... இவர்களும் இத்தொழிற்சங்கப் போராட்டத்தில் பங்கெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடவேண்டிய விடயம். இப்பொழுது சகல கல்வியாளர்களும் எதிர்பார்த்திருக்கும் ஒரே விடயம் அரச சுற்றறிக்கை. இச்சுற்றறிக்கை வெளிவந்தவுடன் சகல கேள்விகளுக்கும் விடை தெரிய வருமா..? என்பதும் தற்போது கூறமுடியாமல் இருக்கிறது. இறுதி நேரத்தில் சில பல்கலைக்கழகங்கள் தங்கள் கல்வி நடவடிக்கைகளை மீளத்தொடங்கியமை தொழிற்சங்க நடவடிக்கையை பாதிக்கும் என்பதனால் கூட தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு கொண்டுவரப் பட்டிருக்கலாம்.

எது எவ்வாறெனினும், நியாயமான இப்போராட்டம், இருட்டடிப்புச் செய்யப்படாமல் நியாயமாகவே முடிவடைய வேண்டுமென்பதே பலரின் எதிர்பார்ப்பாகும். எனவே, பணி முடக்கம் அமுலில் இருந்த காலப்பகுதியில் இருந்த தொடர்பாடல் நிலை தற்போதைய நிலையிலும் காணப்பட்டால், சங்கத்தின் சகல நடவடிக்கைகளும் வெற்றியடையும் என்பதில் ஐயமில்லை.


Listen
Read phonetically

செவ்வாய், 26 ஜூலை, 2011

தகவலும் தொடர்பாடல் தொழிநுட்பமும் - முன்னோடிப் பரீட்சை

 இன்று(26-07-2011) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் வரலாற்றில் முக்கியமானதொரு நாள். வன்னிப் பிராந்தியத்தின் மாபெரும் கல்விக்கழகமாகவும், ஆராய்ச்சி சாலையாகவும் விளங்குகின்ற வவுனியா வளாகம் சமூகத்திற்கு ஆற்றி வருகின்ற சேவைகள் அளப்பரியன. அவ்வழியில் நடைபெற்ற முக்கியமான மற்றுமொரு சேவையாக இம்முறை க.பொ.த(உ.த) பரீட்சைக்கு தோற்றவிருக்கிற மாணவர்களுக்காக இன்று நடாத்தப்பட்ட முன்னோடிப் பரீட்சையைக் கருதலாம்.

இலங்கை கல்வித் திணைக்களத்தின் புதிய பாடத்திட்டங்களின் படி அறிமுகப்படுத்தப்பட்ட பாடங்களுள் ஒன்றே தகவலும் தொடர்பாடல் தொழிநுட்பமும் ஆகும். இந்த ஆண்டுதான் இதற்கான முதலாவது அரச பரீட்சை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வவுனியா மாவட்ட மாணவர்களும் இந்த பாடத்தை தங்களுடைய பிரதான பாடங்களுள் ஒன்றாக வரித்துக் கொண்டார்கள். தமிழ் மொழியில் போதுமான வளமின்மை, பயிற்றப்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை என்பவற்றுக்கு மத்தியில் இப்பாடத்தை இம்மாணவர்கள் தெரிவு செய்தது இம்மாணவர்களின் மனத் தைரியத்தையே காட்டுகிறது. எப்படியோ கஷ்டப்பட்டு இரண்டு வருடங்களைப் பூர்த்திசெய்தார்கள். எனினும் சில பாடப் பரப்புகளின் மீதான அவர்களின் சந்தேகங்களைத் தீர்க்க பாடசாலைகளால் முடியாதிருந்தது. இதன் போதுதான் பாடசாலை அதிபர் ஒருவர் மூலமாக வவுனியா வளாகத்தின் பெளதீக விஞ்ஞானத் துறையின் அப்போதைய தலைவராக இருந்த கலாநிதி. எஸ். கிருஷ்ணகுமார் அவர்களுக்கு இது பற்றி அறிவிக்கப்பட்டது. அக்கணம் முதல் வவுனியா வளாகம் இதற்காக ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தது.

மிகக்குறுகிய காலத்தில் முன்னோடிப் பரீட்சையொன்றை நடாத்துவதற்கான சகல ஒழுங்குகளையும் மேற்கொண்டனர். நிச்சயமாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம் சம்பந்தமாக தகவல்களை தமிழில் வழங்குவதென்பது மிகக் கடினமானதொரு பணியாகும். இப்படியான பாரிய பணியை வழங்குவதற்கு ஒருங்கிணைப்பாளராக கலாநிதி. எஸ். கிருஷ்ணகுமார் அவர்களும் நிகழ்ச்சித்திட்டப் பொறுப்பாளராக திரு. ரீ. ஜெயமுகன் அவர்களும் பணியாற்றியிருந்தனர். மிக முக்கியமாக வவுனியா வளாகத்தில் செய்முறையாளர்களாகக் கடமையாற்றும் கிருஷாந்த், முகமது ரிஃப்தி, சத்யபிரியா, கயானன், அகிலா, நிஷாந்தி, ஆர்த்தி, பிரியதர்சன் என்போர் மிகப்பாரியதொரு பங்களிப்பை வழங்கியிருந்தனர். இன்று மாலை பரீட்சை முடிவடைந்ததும் மாதிரி விடைகள் அம்மாணவர்களின் ஆசிரியர் மூலமாக வழங்கப்பட்டது.

இறுதி நிகழ்வின்போது வளாக முதல்வர் திரு. ஆர். நந்தகுமாரன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். பல்தேர்வு வினாக்கள், மற்றும் பல்கலைக்கழக அனுமதிக்கான உளச்சார்பு பரீட்சையின் முக்கியத்துவம் என்பவற்றை முதல்வர் தமது உரையில் வலியுறுத்தினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கலாநிதி. எஸ். கிருஷ்ணகுமார் அவர்கள் தமதுரையில், பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி திரு. எஸ். குகனேசன் அவர்கள் தமது நிகழ்ச்சிக்கு ஆதரவும், அனுமதியும் வழங்கியமைக்கு நன்றி தெரிவித்தார். மேலும் முதல்வர், செய்முறையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஏனையோருக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வில் ஆசிரியர், மாணவர், நிகழ்ச்சித்திட்ட குழு என்போரும் தமது கருத்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.

ஆக மொத்ததில் மிகப் பயன்பாடானதொரு சேவையை வவுனியா வளாகம் இன்று வழங்கியிருந்தது. இந்த அர்ப்பணிப்பு நிறைந்த சேவைக்கு தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் வில்லொளி தெரிவித்துக்கொள்கிறது.

திங்கள், 25 ஜூலை, 2011

த.தே.கூ எம்மக்களுக்கு என்னதான் செய்யப் போகிறது..? - திருக்கோவில், காரைதீவு


ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடந்த ஜூலை 23 ஆம் திகதி நடைபெற்றது. நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 45 சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது.இத்தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்கிலுள்ள 18 உள்ளூராட்சி சபைகளையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 02 சபைகளையும் வெற்றி பெற்றுள்ளது. இத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் பாரிய வாக்கு சரிவுக்கு முகம் கொடுத்து சகல உள்ளூராட்சி சபைகளிலும் படுதோல்வி அடைந்துள்ளன.
இதேநேரம் அம்பாறை மாவட்டத்தில் இரு உள்ளூராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

திருக்கோவில் பிரதேச சபையில் த.தே.கூ 7 ஆசனங்களையும், ஐ.ம.சு.கூ, ஐ.தே.க என்பன தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியிருக்கின்றது. கடந்த தேர்தலையும் விட அதிக வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையிலும், தமது மொத்த வளங்களை அரசு பயன்படுத்திய நிலையிலும் ஒரு ஆசனத்தை மட்டும் இங்கு பெற் முடிந்தது, அரசு மீதான மக்களின் வெறுப்பையே பிரதிபலிக்கின்றது. இதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி என்று கருதுவதானது ஆரோக்கியமான முடிவன்று.

இதனிலும் பார்க்க காரைதீவு பிரதேச சபை மக்கள் ஐ.ம.சு.கூ இற்கு எந்தவொரு ஆசனமும் கிடைக்காத ஒரேயொரு உள்ளூராட்சி சபையென்ற பெருமையைப் பெற உதவியிருக்கிறார்கள். இங்கு இலங்கை தமிழரசுக் கட்சி 4 ஆசனங்களையும், முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றி இருக்கின்றது. 

அம்பாறை மாவட்டத்தில் இவ்விரு பிரதேசங்களும் தமிழர்களைச் செறிவாகக் கொண்ட பிரதேசங்கள். இவ்விரு பிரதேசங்களுக்கும் பொருத்தமான தமிழ் தலைவர்கள் இல்லாமையே மக்களின் நெடுங்கால குறைபாடாகும். பெரும்பான்மைக் கட்சிகளை ஆதிக்கம் செலுத்த விடாமல் நெடுநாட்களாக இப்பிரதேச மக்கள் வாக்களித்து வருகின்றனர். இதன் காரணமாகவே த.தே.கூ வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வட இலங்கையில் கூட பேரினவாத கட்சிகளால் சபைகளைக் கைப்பற்ற முடிந்திருக்கிறது. ஆனால் திருக்கோவில், காரைதீவு பிரதேசங்களில் அது நடக்குமாற் போல் தென்படவில்லை.


த.தே.கூ இம்மக்களுக்கு என்னதான் செய்துள்ளது..? இனி என்னதான் செய்யப் போகிறது..? தமிழ் மக்களை காலம் காலமாக ஏமாற்றி அரசியல் வியாபாரம் நடாத்தி வரும் இவர்கள் மீண்டும் தங்களின் வக்கிர நோக்கத்தை தேர்தல் விஞ்ஞாபனம் எனும் போர்வையில் தமிழர்களே ஒன்றுபடுங்கள் இதனாலே தமிழர்களின் ஒற்றுமையை உலகுக்குக் காட்டலாம் எனக் கூறினர், காலத்துக்குக் காலம் மாறிமாறி வரும் பேரினவாத சிங்கள அரசாங்கங்களுடன் பின் கதவால் சென்று சொந்த தேவைகளைப் பூர்த்தி செய்து வரும் இச் சுயநல அரசியல்வாதிகள் மக்களுக்கு செய்யப்போகும் அபிவிருத்திப் பணிதான் என்ன?

எவருக்கும் அஞ்சாமல் தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் அமைப்பை வழி நடத்தி வந்த வே.பிரபாகரனுக்குப் பின்னால் பெரும்பான்மை தமிழர்கள் இருந்த போதிலும், அந்த ஒன்று கூடலினால் எதுவும் சாதிக்க முடியாமல் அழிவுகளைச் சந்தித்தமை தான் வேதனையின் உச்சம்.
நன்றி-களத்துமேடு
எனவே, திருக்கோவில், காரைதீவு பிரதேச சபைகளில் வெற்றி பெற்ற அரசியல்வாதிகளே... நாங்கள் எப்போதும் அரசியல்வாதிகள் தான் என்று நிரூபிக்காமல் இப்பிரதேச மக்களின் அபிவிருத்திக்காக சிறிதளவாவது பாடு படுங்கள் என வில்லொளி தயவாகக் கேட்டுக் கொள்கிறது.

சனி, 23 ஜூலை, 2011

காரைதீவு பிரதேச சபை முடிவுகள் - 2011


இறுதி முடிவுகள் - 2011
காரைதீவு பிரதேச சபை 

த.தே.கூ - 4292
மு.கா- 2334
ஐ. ம.சு.கூ - 1133


 இம்முடிவுகளை தேர்தல் வரலாற்றில் முதன் முதலாக மிக விரைவாக அறியத் தந்தது வில்லொளி என்பது குறிப்பிடத்தக்கது.


பொறுப்பாகாமை அறிவித்தல் : இம்முடிவுகளில் ஏற்படும் திருத்தங்களுக்கு வில்லொளி பொறுப்பாகாது.

இறுதி முடிவுகள் - 2011


 நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் வாக்குகள் எண்ணப் பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் திருக்கோவில் பிரதேச சபையின் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு விட்டன. அதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபையைக் கைப்பற்றி முன்னணியில் உள்ளது. இம்முடிவுகளை தேர்தல் வரலாற்றில் முதன் முதலாக மிக விரைவாக அறியத் தந்தது வில்லொளி என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ இறுதி முடிவுகள் - 2011
திருக்கோவில் பிரதேச சபை 

த.தே.கூ - 6739 + 126 = 6865
ஐ. ம. சு. கூ - 1238 + 11 = 1249
ஐ. தே .க - 802 + 8 = 810

த.ம.வி.பு - 493 + 4 = 497


இம்முடிவுகளை மிக விரைவாக அறிவதற்கு உதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் வில்லொளியின் மனமார்ந்த நன்றிகள்


பொறுப்பாகாமை அறிவித்தல் : இம்முடிவுகளில் ஏற்படும் திருத்தங்களுக்கு வில்லொளி பொறுப்பாகாது.

விசேட முடிவுகள்

     நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் வாக்குகள் எண்ணப் பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் திருக்கோவில் பிரதேச சபையின் 65 % ஆன வாக்குகள் எண்ணப்பட்டு விட்டன. அதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபையைக் கைப்பற்றி விடுமாற் போல் முன்னணியில் உள்ளது.

இதோ தற்போதைய 65 % ஆன முடிவுகள்

த.தே.கூ - 4410
ஐ. ம. சு. கூ - 795

த.ம.வி.பு - 328
ஐ. தே .க - 299





பொறுப்பாகாமை அறிவித்தல் : இம்முடிவுகளில் ஏற்படும் திருத்தங்களுக்கு வில்லொளி பொறுப்பாகாது.

தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் - 2011

இலங்கையிலே மிக விரைவாக தேர்தல் முடிவுகளைத் தருகின்றது உங்கள் வில்லொளி..

திருக்கோவில் பிரதேச சபை
(தபால் மூல முடிவுகள்)

த.தே.கூ - 126
ஐ. ம. சு. கூ -11
ஐ. தே .க - 8
த.ம.வி.பு - 4

நிராகரிக்கப்பட்டவை - 1

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 150.

பொறுப்பாகாமை அறிவித்தல் : இம்முடிவுகளில் ஏற்படும் திருத்தங்களுக்கு வில்லொளி பொறுப்பாகாது.

புதன், 20 ஜூலை, 2011

திருக்கோவில் பிரதேச சபை - 2011

         திருக்கோவில் பிரதேச சபை உட்பட 67 உள்ளூராட்சி சபைகளுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் 23-07-2011 சனிக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது. இந்நிலையில் திருக்கோவில் பிரதேச நிலவரங்கள் எவ்வாறு இருக்கின்றது என வில்லொளி தருகின்றது.

 2011 ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி சபைகளுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு இன்னும் 48 மணித்தியாலங்களே எஞ்சியுள்ள நிலையில், திருக்கோவில் பிரதேச மக்கள் யாருக்கு தமது வாக்குகளை இடுவது என்பதை ஓரளவு தீர்மானித்திருக்கிறார்கள். ஏறத்தாழ 16,000 வாக்காளர்களைக் கொண்ட இப்பிரதேசத்திலே உள்ள பிரதேச சபைக்கு 9 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலே பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் சுமார் 8,500 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். இதன்படி புலிச்சார்பு இலங்கை தமிழரசுக் கட்சியினர் 9 ஆசனங்களையும் கைப்பற்றி இருந்தனர். ஏனைய கட்சிகளால் தமது கட்டுப் பணத்தைக் கூட வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது..

இது இவ்வாறிருக்க, இந்த தடவை இவ்வாறானதொரு பாரிய வெற்றி எந்தக் கட்சிக்காவது கிடைக்குமா என்று பார்த்தால் அது மிகக் கஷ்டம்தான். பல கட்சிகள் இத்தேர்தலிலே குதித்திருந்தாலும் இங்கு இடம்பெறப்போவதென்னவோ மும்முனைப் போட்டிதான். அரச விரோத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்பவற்றுக்கிடையேதான் பாரிய போட்டி நிலவுகின்றது. 

வில்லொளியின் கருத்துக் கணிப்பின் படி,
த.தே.கூ - 5/6 ஆசனங்கள்
ஐ.தே.க - 2/3 ஆசனங்கள்
ஐ.ம.சு.கூ - 1 ஆசனம்
 என்ற விகிதத்தின்படி பெறக்கூடிய சாத்தியங்களே காணப்படுகின்றன.

ஆளும் ஐ.ம.சு.கூ இன் அதி உச்ச பிரச்சாரங்களும், விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் அநுகூலங்களும் சேர்ந்து ஐ.ம.சு.கூ இற்கு ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொடுக்கலாம். த.தே.கூ இன் வீழ்ச்சிக்கான காரணங்களைப் பார்க்குமிடத்து புலிகளின் மெளனிப்பு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. எனினும் அபேட்சகர்கள் தெரிவில் த. தே.கூ அதிக கவனம் செலுத்தவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது. கட்சியில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் மக்களின் மனங்களை வெல்லக் கூடியவர்களாக காணப்படவில்லை. அத்துடன் ஐ.தே.க ஒரு சில முக்கிய புள்ளிகளை வாங்கி த.தே.கூ இன் வாக்கு வங்கியைச் சிதைத்துள்ளது. 

தம்பட்டை, விநாயகபுரம், சாகாமம் போன்ற இடங்களில் த.தே.கூ இற்கு அதிகளவான செல்வாக்கு காணப்படுகின்றது. தம்பிலுவில், திருக்கோவில் பிரதேசங்களின் ஒரு சில இடங்களில் த.தே.கூ முழுமையாக ஆதிக்கம் செலுத்தினாலும், சில இடங்களில் கடும் போட்டியை சந்திக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.

எது எவ்வாறெனினும் மக்கள் எக்கட்சியைத் தேர்ந்தெடுப்பது என்பதில் அவதானமாக இருக்க வேண்டும். த.தே.கூ இன் ஆசனங்களை குறைவடையச் செய்வதன் மூலம் தமது பிரச்சாரங்களை முன்னெடுக்க அரசுக்கு இயலுமானதாவிருக்கும். த.தே.கூ இற்கு வாக்களிப்பதன் மூலம் திருக்கோவில் பிரதேச மக்கள் அடையக்கூடிய புறத்தோற்ற அபிவிருத்திகள் எனப் பார்க்குமிடத்து எதுவுமில்லைதான். அதே போல் அரசுக் கட்சிகள் பெறும் வெற்றியும் பிரதேசத்தின் அப்விருத்திக்குப் பயன் படப் போவதில்லை. எனவே புற அபிவிருத்தியை விட சமூகச் சுயநிர்ணய உரிமையே இங்கு முதன்மை ஆகின்றது. அதை அடைவதற்கு இன்றைய நிலையில் த.தே.கூ ஐ விட வேறு எவரும் வழியாகத் தெரியவில்லை. எனவே, திருக்கோவில் பிரதேசச் சமூக அபிவிருத்திக்கு வாக்களிக்கும்படி மக்களை வில்லொளி வேண்டி நிற்கிறது.